வேலூர் : வேலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் ‘காத்தாடி வாழ்க்கை’ என்ற சமூக விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூடுதல் காவல் சூப்பிரண்டு திரு. குணசேகரன், முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட காவல் காவல் சூப்பிரண்டு திரு. ராஜேஷ்கண்ணன், தலைமை தாங்கி குறும்படத்தை வெளியிட்டார். இதில், மாஞ்சா நூல் பயன்படுத்தி காத்தாடி விடுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அதனால் உருவாகும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறுகையில், இந்த குறும்படம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு முதல் இதுவரை கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 115 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக 284 வழக்குகள் பதியப்பட்டு 294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6,489 கிலோ குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற வழக்கில் 33 பேரும், சாராயம் விற்பனை வழக்கில் 1,586 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வருகிற 11-ந் தேதி முதல் மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.