விழுப்புரம் : திண்டிவனம், அருகே ஓங்கூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 50 அடி நீளமுள்ள சிறிய பாலம் பழுதடைந்தது. அதாவது அதில் வாகனங்கள் செல்லும்போது அந்த பாலம் அசைந்தாடியது. எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருந்ததால் பொதுமக்கள் அச்சத்துடனேயே பாலத்தில் பயணம் செய்தனர். இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த வாரத்தில் அந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. மாறாக ஒரு வழிப்பாதை வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டன. பாலத்தின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஒருவழிப்பாதையானதால் அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 10 வாகனங்கள் மோதல் இந்த நிலையில் நேற்று சென்னை மார்க்கமாக செல்லும் ஒருவழிப்பாதையில் சென்ற வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 10 வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதி அடைந்தனர். எனவே பழுதடைந்த பாலத்தின் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக்கட்டையை(சென்டர் மீடியன்) உடைத்து வழி ஏற்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் விபத்து ஏற்படாமல் வாகனங்கள் செல்லும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். தடுப்புக்கட்டை உடைப்பு இதை ஏற்று உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, தலைமையிலான காவல்துறையினர், நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து நகாய் அதிகாரிகள் உதவியுடன் பழுதடைந்த பாலத்தின் அருகில் உள்ள தடுப்புக்கட்டையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வழி ஏற்படுத்தினர். மேலும் இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேனர்களும், சாலையில் பேரிகார்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக வாகனங்கள் தடையின்றி சென்று வருகின்றன.