வேலூர் : வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, குடியாத்தம் ஆகிய 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்களுக்கு 6 இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு .திருநாவுக்கரசு, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திரு .பூபதிராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி 4 போலீஸ் நிலையங்களுக்கும் ‘டிராபிக் மார்ஷல்’ எனப்படும் இருசக்கர வாகனங்களை வழங்கி, அதன் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு, நிருபர்களிடம் கூறியதாவது, வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 10 நாட்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஐ.ஐ.டி. குழுவினர் மற்றும் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்து சில மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய பஸ் நிலையத்துக்கு உள்ளே பஸ்கள் செல்லும் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதாக புகார் வந்துள்ளன. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் முக்கிய சாலையோரம், ஓட்டல்களின் முன்பு, பஸ் நிலையத்தின் வெளியே வாகனங்களை நிறுத்தி செல்வது, ஆட்டோக்கள் சாலையின் அனைத்து இடங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி செல்வது உள்ளிட்டவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்க 4 போலீஸ் நிலையங்களில் போலீஸ் ‘டிராபிக் மார்ஷல்’ அமல்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருசக்கர வாகனங்களில் வாகன நெரிசல் காணப்படும் இடங்களுக்கு உடனடியாக சென்று போக்குவரத்தை சரி செய்து பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள். அதைத்தவிர விபத்து நடக்கும் இடங்களுக்கு சென்று முதலுதவி அளிக்கவும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிப்பார்கள்.
6 இருசக்கர வாகனங்களில் பணியில் உள்ள போலீசார் 6 இடங்களில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வார்கள். தினமும் காலை 7 முதல் 10.30 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையும் ‘டிராபிக் மார்ஷல்’ போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். இந்த இருசக்கர வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் அவர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிந்து கொள்ள முடியும். பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக புகார் தெரிவித்தால் உடனடியாக ‘டிராபிக் மார்ஷல்’ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சரி செய்யப்படும்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்