கோவை : பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தினமும் போக்குவரத்து நெருக்கடியில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். பொள்ளாச்சி சுற்றுலா சார்ந்த பகுதி என்பதால் தினமும் சுமார் 50 ஆயிரம் வாகனங்கள் பொள்ளாச்சி வழியாக சென்று வருவதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கேரளாவிற்கு ஏராளமான கனரக வாகனங்களும் பொள்ளாச்சி வழியாக சென்று வருகின்றன. இதனால் முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்களில் பொள்ளாச்சி நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கிடையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நகரில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆனால் சாலை அகலப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தமிழக அரசு உத்தரவு வாகனங்களுக்கு ‘பூட்டு’ இந்த நிலையில் போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு ‘பூட்டு’ போடும் திட்டத்தை அமல்படுத்த பொள்ளாச்சி துணை காவல் சூப்பிரண்டு திருமதி. தீப சுஜிதா, உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அருணாசலம் மற்றும் காவல்துறையினர் , காந்தி சிலை, உடுமலை ரோடு, பஸ் நிலையம், நியூஸ்கீம் ரோடு உள்பட நகரில் முக்கிய சாலைகளில் உள்ள இடங்களில் போக்குவரத்து விதிமுறையை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ‘பூட்டு’ போட்டனர்.