தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாவட்ட ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் சாத்தான்குளம் அந்தோணி மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், சாத்தான்குளம் நகர்ப்பகுதி முழுவதும் ஒரு மாதத்திற்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும், அவ்வாறு பொருத்துவதன் மூலம் குற்றங்கள் நடக்காது, நடந்த குற்றத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம், யாரும் பொய் சொல்ல முடியாது.
நான் காவல் துறையினருக்கு கூறுவது காவல்துறை பணியை விட மிக முக்கியமானது சமூகப்பணி உதாரணமாக இது கொரோனா தொற்று பரவல் காலமாக இருப்பதால் மாஸ்க் அணியாமல் செல்பவர்களை மாஸ்க் அணியுமாறு கூறி, அவர்களுக்கு மாஸ்க் வழங்குவது போன்று, அந்தந்த காலத்திற்கேற்ப பல்வேறு சமூக பணிகளை செய்யுமாறு அறிவுரை வழங்கி வருகிறேன், சமூகப்பணி செய்வதன்மூலம் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடைவெளி வராமல் ஒரு சுமூகமான உறவு ஏற்படும், கண்டிப்பாக உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இனிமேல் சாத்தான்குளம் காவல்துறை இருக்கும், அதனால் உங்களுடைய பழைய ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை, இனிமேல் வரக்கூடிய அதிகாரிகள் உங்களுக்கு இணக்கமாகத்தான் இருப்பார்கள் என்று கூறினார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கு வந்திருந்த கூட்டத்தினருக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
இவர்களுடன், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) நாகராஜன், காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர், உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டனர்.