கோவை: கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என, பலருக்கு அழைப்பு வருகிறது.
அழைப்பை துண்டிப்பதுடன் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்கள் தங்களது புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
புகைப்படங்களை ‘மார்பிங்’ செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக, பணம் கேட்டு யாராவது மிரட்டினால், உடனடியாக அருகில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம்.
மொபைல்போனுக்கு தேவையின்றி வரும், குறுஞ்செய்திகளில் உள்ள ‘லிங்கை’ தொடுவதை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வாட்ஸ்-ஆப் மூலம் தொடர்பு கொண்டு ஏதாவது நிறுவனத்தின் பெயரை கூறி பணத்தை இரட்டிப்பாக்கி தருவது, வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறினால் நம்ப வேண்டாம்.
உங்களது உறவினர்கள் பெயரை கூறி, சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்டு அவசர தேவையாக பணம் கேட்டால், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்த பின்தான் வழங்க வேண்டும்.
ஆன்லைனில் குறைந்த விலையில் ஆக்சிஜன் சிலிண்டர், இதயதுடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை கண்டறியும் கருவி என்று கூறி வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இதுபோன்ற செயலிகள் உங்களது கைரேகையை பயன்படுத்தி, தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது.
ஆன்லைனில் வரும் வாகனங்கள், பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையை நம்பக்கூடாது. முக்கியமாக, குழந்தைகள் பணம் செலுத்தி ஆன்லைனில் விளையாடுவதை, கண்காணிக்க வேண்டும்.
இதுபோன்ற விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து, www.cybercrimr.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.