திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களது ஊருக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த காலங்களில் விவசாயம் செய்து அனுபவித்து வந்துள்ளனர். அண்மைக்காலமாக இந்த புறம்போக்கு நிலம் தரிசு நிலமாக விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக வருவாய் துறையினர் அரசு புறம்போக்கு நிலத்தை தூய்மைப்படுத்தி அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களது கிராமத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கிருதலாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிருதலாபுரம் கிராம மக்கள் பேரணியாக வந்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். வேறு கிராம மக்களை தங்களது கிராமத்தில் குடியமர்த்தும் முன் தங்களது கிராமத்தில் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு மனை வழங்கிட வேண்டும் என கேட்டுகொண்டனர்.
வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து கோரிக்கை மனுக்களை பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமாரிடம் அளித்தனர். மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் அளித்த உறுதியை ஏற்று கலைந்து சென்றனர். இதனிடையே தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுதல், நிலத்தை கையகப்படுத்தும் போராட்டம் என அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு