திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மேல்மாளிகைபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெண் விவசாயி தனபாக்கியம். இவர் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் வேர்க்கடலை, பூச்செடி விவசாயம் செய்து வந்தார். அண்மையில் அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தால் இவரது 3 ஏக்கர் விளை நிலம் அரசு கையகப்படுத்தும் நிலை இருந்தது. நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது மேடையில் பேசிய தனபாக்கியம் தமக்கு 3ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதில் இருந்து தான் உணவு உண்பதாகவும், இல்லை என்றால் நிலத்திலேயே விழுந்து செத்து விடுவேன் எனவும், குழந்தை குட்டிகள் என அனைவரும் செத்து விடுவோம் என வேதனையுடன் பேசினார்.
அதற்கு அவசியம் இல்லை நான் பார்த்து கொள்கிறேன் என அன்புமணி அப்போது ஆறுதல் கூறினார். இந்நிலையில் அன்புமணி முன்னிலையில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பெண் விவசாயி நேற்றிரவு மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்திற்கு விளை நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பேசிய பெண் விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு