தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சம்படி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி செங்கமலம் (வயது47). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கணேசன் இறந்து விட்டார். பின்னர் அவரது தம்பி ஆண்டியப்பன் (வயது42) என்பவருடன் செங்கமலம் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் அரை கிமீ தொலைவில், முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண கோலமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக்கொலை தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயகுமார், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.