நாமக்கல்: நாமக்கல்மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நாலாம் தேதி அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கஸ்தூரிக்கு இது மூன்றாவதாக பிறந்த குழந்தை ஆகும் .
சுகப் பிரசவம் என்பதால் சில நாட்களிலேயே கஸ்தூரியை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். வீட்டிற்கு வந்த கஸ்தூரி ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தன் குழந்தை திடீரென்று உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் சொல்லி கதறி அழுதிருக்கிறார். உறவினர்களும் ஊராரும் திரண்டுவந்து குழந்தைக்கு அஞ்சலி செலுத்தி அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்துள்ளனர். இந்த தகவல் மருத்துவமனைக்கு தெரியவந்திருக்கிறது. மருத்துவமனை மூலம் சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுகப் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தை ஒரு வாரத்திற்குள்ளேயே எப்படி இருந்தது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது சுகாதாரத்துறையினருக்கு. இதையடுத்து எருமைப்பட்டி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.சுகாதாரத் துறையினர் அளித்த புகாரின்பேரில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று, புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஹைதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் அந்த ஆய்வறிக்கை வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையில் குழந்தையின் தலையில் அடிபட்டு உயிரிழந்தது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து போலீசார் கஸ்தூரியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் , குழந்தையின் தலையில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பிறந்து இருக்கும் நிலையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் தலையில் அடித்து கொலை செய்ததாக கஸ்தூரி போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து எருமைப்பட்டி போலீசார் கஸ்தூரியை கைது செய்துள்ளனர்.
பெண்குழந்தை என்பதற்காக பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தையை பெற்ற தலையில் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.