ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில், தமது மேல் அதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் பாலியல் தொந்தரவு ஏற்படுவதை தவிர்க்கவும், ஏதேனும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் தரப்பட்டால், அதனை விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் தலைவராக திருமதி. S. சாந்தி தேவி, காவல் கண்காணிப்பாளர், ராமநாதபுரம், இதன் உறுப்பினர்களாக திரு.S. லயோலா இக்னேசியஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், திருமதி.B. நாகசாந்தி, காவல் ஆய்வாளர், ராமநாதபுரம், திருமதி.U. விமலா, காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இராமநாதபுரம், திரு.B. இளங்கோவன், நிர்வாக அதிகாரி, மாவட்ட காவல் அலுவலகம், ராமநாதபுரம் மாவட்டம், திருமதி.O. உஷா தேவி, வழக்கறிஞர் ராமநாதபுரம், இவர் அரசு சாரா அமைப்பு உறுப்பினர், ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி புகார்கள் தொடர்பாக விசாரிக்கும். மேலும் இக்குழுவானது தமது செயல்பாடுகள் தொடர்பான வருடாந்திர அறிக்கையை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பெண் காவலர் மற்றும் பணியாளர்கள் பணி புரியும் இடங்களில் கீழ்க்கண்டவாறு மற்றும் வேறு எந்த வகையில் பாலியல் ரீதியாக தொந்தரவு ஏற்பட்டால் அதனை சகித்துக் கொள்ளக் கூடாது. அதனை மேற்கண்ட உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் இடத்தில் நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
- உடல் அங்கங்கள் மீது தெரியாமல் படுவது போல தொடுதல் உரசுதல்
- பாலியல் தொடர்பான அர்த்தங்கள் வெளிப்படும் பேசுதல் மற்றும் நகைச்சுவை கூறுதல்
- பாலியல் உணர்வுகள் தொடர்பாக விசாரித்தல் மற்றும் வீட்டில் அவர்களது பாலியல் ரீதியான வாழ்க்கையை பற்றி விசாரித்தால்
- பாலியல் உணர்வை தூண்டும் படி எழுத்து மூலமாக தெரிவித்தல்
- தொடர்ந்து இடைவிடாமல் அல்லது விட்டுவிட்டு பார்த்துக் கொண்டே இருத்தல்
- பாலியல் உணர்வை தூண்டும் உடல் அசைவுகளை வழிகாட்டுதல் அங்கங்களை காட்டுதல்
- பாலியல் தொடர்பான வார்த்தைகள் பேசியும் திட்டியும் மனம் புண்படும்படியாகப் பேசுதல் மற்றும் இன்னபிற மனதிற்கும் உடலிற்கும் ஒவ்வாத செயல் பாடுகள்
இவ்வாறு தகவல் தெரிவிக்கப்படும் பட்சத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் திரு. வருண்குமார், IPS தெரிவித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்