சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து உரிய அனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 560 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் தணிக்கை செய்து வருகின்றனர்.
07.6.2021 அன்று காலை முத்தியால்பேட்டை, பிரகாசம் சாலை, பாரதி பெண்கள் கலைக்கல்லூரி சந்திப்பு (ஸ்டான்லி ரவுண்டனா) அருகில் N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.கீர்த்திகா மற்றும் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும்பொழுது,
அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்தபோது, ஆட்டோ ஓட்டுநர் முகக்கவசம் அணியாமல் வந்ததால், உதவி ஆய்வாளர் கேட்டதற்கு உதவி ஆய்வாளரிடம் வீண் வாக்குவாதம் செய்து, உரக்க சப்தமிட்டு தகாத வார்த்தைகளால் பெண் உதவி ஆய்வாளரை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்து சென்றார்.
அதன் பேரில் பெண் உதவி ஆய்வாளர் N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 188, 269, 270, 353, 294 (b), 506 (i) மற்றும் பிரிவு 4 பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் படி வழக்குப்பதிவு செய்து, N-3 முத்தியால்பேட்டை காவல்ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் அஸ்கர் அலி, வ/39, பெரம்பூர் என்பவர் எனத் தெரியவந்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டு, ஆட்டோ ஓட்டுநர் அஸ்கர் அலியை 7.6.2021 அன்று கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள், தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து முன்கள பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, முறையான ஊரடங்கை அமல்படுத்துவதற்கு வழிவகை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.