சென்னை: சென்னையில் காலமான பெண் ஆய்வாளரின் உடலை, சக காவலர்களுடன் இணைந்து பெண் துணை ஆணையர் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீதேவி. இவர் அதேபகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த ஸ்ரீதேவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தகவலறிந்து சென்ற அமைச்சர் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் காவலர்கள், ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நல்லடக்கத்திற்காக ஸ்ரீதேவியின் உடலை, துணை ஆணையர் சுப்புலட்சுமி தனது சக பெண் காவலர்களுடன் மயானம் வரை சுமந்து சென்றார்.இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
இதுகுறித்து துணை ஆணையர் சுப்புலட்சுமி கூறும்போது, “ஸ்ரீதேவி இறந்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். திடீரென தோன்றியதால் சக காவலர்களுடன் சேர்ந்து தூக்கிச் சென்றேன். இறந்தது ஒரு ஆய்வாளராக இல்லாமல் காவலராக இருந்தால் கூட நான் இதைத்தான் செய்திருப்பேன்” எனத் தெரிவித்தார்.