தேனி : தேனி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் மற்றும் குற்றச் சம்பவங்களை முற்றிலும் தடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உத்தமபாளையம் உட்கோட்ட கிராமப் பகுதிகளில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கிராம பொதுமக்களை சந்தித்து குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தங்கள் பகுதியில் ஏதேனும் சட்ட விரோதமாக நடக்கக்கூடிய சட்டவிரோத செயல்கள்,போதை பொருட்கள், மதுபானம், கஞ்சா பதுக்கும் நபர்கள், விற்பனை செய்பவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று எடுத்துக் கூறியும்,
மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள், பெண்கல்வி முன்னேற்றம் மற்றும் ஆபத்து காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள் குழந்தைகள்-(1098) , பெண்கள்-(181) கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கியும், தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் முற்றிலும் தடுக்கவும்,பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தேனி மாவட்ட காவல்துறைக்கு கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.