சிவகங்கை : பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு காண தயக்கமின்றி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று காரைக்குடி காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் தெரிவித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக மகளிரியல் துறை, சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணா்வு முகாம் கடந்த நவம்பா் 25 – ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாம் 10- ஆம் தேதி நிறைவடைகிறது. இதில், சுய உதவிக் குழு மகளிருக்கான ஒரு நாள் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி மகளிரியல் துறை கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் பேசியதாவது: காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து உதவி புரிகிறது. எனவே தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு பெண்கள் எவ்வித தயக்கமுமின்றி காவல்நிலையத்துக்கு வந்து தீா்வு காணலாம். மேலும் பெண்கள் பாதுகாப்புக்காக கட்டணமில்லா 181, 1091 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்படுகின்றன. மேலும் குழந்தைகள் பாதுகாப்புக்கான 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் உள்ளது. எனவே பெண்கள் தங்கள் கைப்பேசியில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றாா். பல்கலைக் கழகத் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பெண்கள் சுயமேம்பாட்டுக்காக 1975-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் முதல் முதலாக சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது. இந்தியாவில் 1995-ஆம் ஆண்டு மகளிா் சுயஉதவிக் குழு தொடங்கி தற்போது 3.4 கோடி பெண்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த குழுவில் இடம்பெற்ற பெண்களிடையே தன்னம்பிக்கையும், பொருளாதாரமும் வளா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா். மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அன்புகுளோரியா, வழக்குரைஞா் கண்ணப்பன் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பல்வேறு துறைகளைச் சோந்த பேராசிரியைகள், மாணவிகள், பெண் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக பல்கலைக் கழக மகளிரியியல் துறைத் தலைவா் கா. மணிமேகலை வரவேற்றாா். உதவிப் பேராசிரியை வீரமணி நன்றி கூறினாா்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி