சென்னை: சென்னை பெருநகரிலுள்ள பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு முன்னிட்டு ” பாதுகாப்பான நகரத் திட்டங்கள் ” ( Safe City Projects ) அமல்படுத்தப்படுகிறது . இத்திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 விகிதாசாரப்படி தேவையான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு ” நிர்பயா பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் ” ஒன்று சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது .
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பலனளிக்கும் வகையில் சிறப்பான ஆலோசனை வழங்கும் பொருட்டு சமூக ஆலோசகர் , சட்டரீதியான ஆலோசகர் மற்றும் குழந்தை மனநல ஆலோசகர் என இப்பிரிவில் மூன்று ஆலோசகர்கள் மேலும் ஒரு வரவேற்பாளர் என நான்கு பேர்கள் சமூக நலகுழுமம் ( வாரியம் ) மூலம் முறையாக தேர்வு செய்யப்பட்டு மேற்குறித்த ஆலோசனை மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனை மையம் சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களால் 23.07.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. திரு ஷம்புகலோலிகர் , இ.ஆ.ப. , அரசு முதன்மைச் செயலாளர், சமூக நலத்துறை மற்றும் திருமதி. ரத்னா, இ.ஆ.ப., இயக்குநர் சமூக நலம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னை பெருநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்கிற குடும்ப வன்முறை, வரதட்சணை போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் ( 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் மற்றும் பெண்கள் உதவி எண் 181 ( Help Line ) மூலம் புகார் தெரிவிக்கும் பெண்கள் மட்டும் மேற்குறித்த ஆலோசனை மையத்திற்கு அழைத்து வரப்பட்டு பயிற்சி பெற்ற இந்த சிறப்பு ஆலோசகர்கள் மூலம் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும் .