விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலையைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மேட்டமலை பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு, அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து போன் அழைப்பு வந்துள்ளது. எதிர் முனையில் பேசிய நபர், உங்களது ஊரை சேர்ந்த கல்லூரி பெண்கள், மற்றும் குடும்ப பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாகவும், ஆபாச வசன வார்த்தைகளுடன், சமூக வலைத்தளமான, டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜசேகர்,
உடனடியாக டுவிட்டர் வலைத்தளத்தை பார்த்துள்ளார். அதில் அந்தப்பகுதியைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்களுடன், ஆபாச வசனங்கள் இருப்பதை பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரிடம், ராஜசேகர் புகார் கொடுத்தார். மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் தனிப்பிரிவு போலீசார், ஆபாச படம் அனுப்பப்பட்டிருந்த டுவிட்டர் வலைத்தள பக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஆபாச வசனங்களுடன், பெண்களின் புகைப்படங்களை பரப்பி வருவது, விஜி என்ற வீரபுத்திரன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விஜி என்ற வீரபுத்திரனின் செல்போன் நம்பரை, கடந்த 4 நாட்களாக கண்காணித்து வந்தனர். ஆனால் இதனை அறியாத வீரபுத்திரன், தொடர்ந்து குடும்பப்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாச வார்த்தைகளுடன் டுவிட்டரில் பதிவேற்றம் செய்து வந்தான்.
சைபர் க்ரைம் போலீசார், செல்போன் டவர் சிக்னலைக் கொண்டு, எங்கிருந்து படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பதை கண்டுபிடித்தனர். செல்போன் சிக்னலை வைத்து சம்பந்தப்பட்ட ஆசாமி, சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை, தெற்கு தெருவில் இருந்து டுவிட்டர் பக்கத்தில், படங்களை பதிவேற்றம் செய்வதை போலீசார் கண்டு பிடித்தனர்.
போலீசார் நெருங்குவதை அறிந்த விஜி என்ற வீரபுத்திரன், உடனடியாக தனது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானான். குற்றவாளி வீரபுத்திரன் தான் என்பதை உறுதி செய்த போலீசார், விஜி என்ற வீரபுத்திரன் வேலை செய்துவந்த தனியார் நிறுவனத்திற்குச் சென்று, அவன் எங்கே இருக்கிறான் என்பதை விசாரித்து, விஜி என்ற வீரபுத்திரனை விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.
பெண்களை பற்றி சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவேற்றம் செய்த விஜி என்ற வீரபுத்திரன் மீது, 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.