மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் தொழில் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிகார் மாநிலம், பசிம் சம்ரான் மாவட்டம், தும்ரி மன்வா பகுதியைச் சேர்ந்த உதித் குமார் திவாரி மகன் திருபுராரி குமார் திவாரி @ மணீஸ் கைஸ்யாப் (32), என்பவர் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக சட்டம் ஒழுங்கு பிச்சனையை தமிழ்நாட்டில் உருவாக்கவேண்டும் என்கிற குற்றமுறு நோக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக தவறாக ஒளிப்படம் சித்தரித்து சமூகவலைதளங்களில் பரவவிட்டும், பணிபுரியும் இடத்தின் பெயரால் மாற்று மாநிலத்தவரை அச்சம் கொள்ள செய்து அவரது உடமைக்கும் உயிருக்கும் சேதத்தை ஏற்படுத்தி இனக்கலவரத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி அதன் மூலம் தேச ஒற்றுமைக்கும் தேச பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை எற்படுத்தியுள்ளார்.
தவறான ஒளிபடக்காட்சி பதிவிட்ட குற்றத்திற்காக மேற்படி குற்றவாளி மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து குற்றவாளியை P.T.வாரண்ட் மூலம் கைது செய்து மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து விசாரணைக்கு பின்பு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் மேற்படி குற்றவாளி திருபுராரி குமார் திவாரி மணீஸ் கைஸ்யாப் என்பவர் மீது மதுரை, திருப்பூர், கிருஸ்ணகிரி, சென்னை திருவான்மியூர் காவல் நிலையங்களில் இதேபோன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இவ்வாறு இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரவவிடும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் மேற்படி நபர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் சிபாரிசு செய்ததின்பேரில் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (05.04.2023),-ம் தேதி மேற்படி நபரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பேரில் மேற்படி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திரு.விஜயராஜ்