கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அருகே கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பகலவன். இ.கா.ப அவர்கள் திறந்து வைத்தார்.
போக்குவரத்து புறக்காவல் நிலையத்தை திறந்துவைத்து பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது இருப்பினும் அத்தியாவசிய தேவைக்கு பொருட்கள் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு கச்சிராபாளையம் ரோடு சேலம் மெயின் ரோடு, தியாகதுருகம் ரோடு ஆகிய பகுதிகளில் ரோட்டின் ஓரம் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர் இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்
இதனை கட்டுப்படுத்தும் பொறுட்டு கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு இப்புறக்காவல் நிலையம் அமைக்கபட்டுள்ளது இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் விதிமுறைகளை மீறி சாலையின் இருபுறங்களிலும் வாகனத்தை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.இளையராஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்காவல்படை மண்டல தளபதி திரு.வசந்த்பாலா, போக்குவரத்து பிரிவு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.