வேலூர் : 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாவட்டம் முழுவதிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் கூடுதலாக ஆண் மற்றும் பெண் காவலர்கள் சீருடையில் சாதாரண உடையிலும் நியமிக்கப்பட்டு அத்துமீறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அநாகரிகமான முறையில், நடந்து கொள்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டின் போது ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், கடைவீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அவற்றைக் கண்காணிக்க, சுழற்சி முறையில் காவலர்களை நியமித்து, தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் அனுமதி இல்லாமல், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக கேளிக்கை நிகழ்ச்சிகள் நடப்பது தடுக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு மற்றும் வானவேடிக்கைகளை தடுக்கவும், மாவட்டத்தில் முக்கியமான இடங்களான சுங்கச்சாவடி, சோதனை சாவடி, தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் Breathe Analyzer கருவியும் வாகன தணிக்கை செய்து, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை, அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போக்குவரத்து நெடுஞ்சாலை ரோந்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கியமாக பைக் ரேஸில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அந்தந்த உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பைக் ரேஸில் ஈடுபடும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யவும் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், சிறுவர்கள் எனில் அவர்களின் பெற்றோர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பைக் ரேஸில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அந்த நபருக்கும் வெளிநாட்டுக்கு செல்ல பாஸ்போர்ட் மற்றும் வேலைவாய்ப்பு பெற காவல் துறை மூலமாக நன்னடத்தை சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய இயலாது.
மேற்படி காவல்துறையினர் அறிவுரைகளை ஏற்று விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட, வேலூர் மாவட்ட பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ் குமார் ஐபிஎஸ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாவட்ட காவல் துறை சார்பாக தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், அனைவருக்கும் 2020 ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்