கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே புதையலுக்காக நண்பனையே கொன்று நரபலி கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கடந்த 28ம் தேதி அவரது விவசாய தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த விவகாரத்தில் லட்சுமணனின் நண்பரான பென்னாகரத்தை சேர்ந்த மணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விவசாய தோட்டத்தில் புதையல் எடுப்பதற்காக நண்பனையே கொன்று நரபலி கொடுத்தது தெரியவந்தது.
லட்சுமணனின் விவசாய தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க நரபலி கொடுக்க வேண்டும் என தருமபுரியை சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார். அதனை நம்பிய லட்சுமணனும் மணியும், அமாவாசை அன்று மேச்சேரியை சேர்ந்த ராணி என்பவரை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் ராணி வராததால், கோழியை பலியிட்டு பூஜை செய்துள்ளனர். மீண்டும் 28ம் தேதி பூஜை செய்ய சென்ற போது, லட்சுமணனுக்கு சாமி வந்து மணியை கடிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன மணி, லட்சுமணனை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், தோண்டப்பட்ட குழியின் மீது லட்சுமணனின் உடலை வைத்துவிட்டு புதையல் வரும் என நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்தனர்