சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.இரா.சிவக்குமார், இ.கா.ப அவர்களின்” நல்லிணக்கம் நாடி” என்ற கனவு திட்டமானது நமது சமூகத்தில் ஏற்படும் திடீர் கோபம், வன்மம், குரோதம், பேராசை, காழ்ப்புணர்ச்சி, மோசமாக பேசிக்கொள்வது இது போன்ற காரணங்களால் குடும்ப தகராறு, நிலத்தகராறு, நண்பர்களுக்குள் பிரச்சனை, மதுபோதையில் பிரச்சனை, கோவில் திருவிழாக்களில் பிரச்சனை ஏற்பட்டு குற்ற வழக்குகள் உண்டாகிறது. நமக்கு என்ன நடக்கக்கூடாது என நினைக்கிறோமோ, அது மற்றவர்களுக்கும் நடக்கக்கூடாது என்ற நல்லிணக்க நோக்கத்தோடு நாம் செயல்படும் போது பல குற்றங்களை தடுக்கலாம். மேலும், பொதுமக்கள்-காவல்துறை இடையே புரிந்துணர்வு மற்றும் நல்லுணர்வு இருந்தால் வாகன விபத்துகள், போதைப்பொருள் விற்பனை, மதுபான குற்றங்கள், திருட்டை தடுப்பது, கணினி குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ளுதல், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து தற்காத்து கொள்ளுதல், சூதாட்டம், லாட்டரி விற்பனை, சாராயம் காய்ச்சுதல் போன்ற அனைத்துவிதமான குற்றங்களையும் தடுக்கவும், கண்டுபிடிக்கவும் இயலும். அதன் மூலமாக சமூக ஒழுங்கை கட்டமைத்து சட்டம்-ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாமல் பேணி பாதுகாக்க முடியும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்..
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.இரா.சிவக்குமார், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரிலும், ஆத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு நாகராஜன் அவர்கள் அறிவுரைப்படி கெங்கவல்லி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் தலைமையில் கெங்கவல்லி காவல் துறையினர் கெங்கவல்லி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கெங்கவல்லி நான்கு ரோடு மற்றும் நடுவலூர் பகுதியில் பொதுமக்களிடம் “நல்லிணக்கம் நாடி” என்ற தலைப்பில் பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்கள். விழிப்புணர்வின் போது கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் பொதுமக்களிடத்தில், “தமிழன் என்றோர் இனமுண்டு” ; தனியே அவற்கொரு குணமுண்டு, அந்த தனித்துவமான குணமே நல்லிணக்கமாகும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” – எனும் குறள் நல்லிணக்கத்தை பற்றி கூறுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் நல்லிணக்கத்துடன் இருந்தால், சமூகத்திலும் நல்லிணக்கம் உருவாகும். முதலில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்துதான் நல்லிணக்கம் உருவாக வேண்டும். தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் நல்லிணக்கம் போதிக்கப்பட வேண்டும். நமக்கு ஏற்படும் தீமைக்கும் நன்மைக்கும் நாம் மட்டும்தான் காரணம். இதையே புறநானூற்றில் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” – என கூறப்பட்டுள்ளது.
வேற்றுமை பாராட்டாத வேறுபாடுகளால் கூறுபடாத ஒற்றுமையே நல்லிணக்கத்தின் அடிப்படையாகும். இந்தியா நம் தாய்நாடு. இந்தியர் அனைவரும் நம்முடன் பிறந்தவர்கள் என்ற உறுதிமொழியானது நமது நாட்டு மக்களிடம் இன, மொழி, மத, ஜாதி, வேறுபாடின்றி ஒரு நாட்டு மக்களாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வாழ்வதற்கு வழிவகுக்கிறது. சமூகங்களிடையே புரிந்துணர்வு, சுகவாழ்வு ஆகியவற்றை நிலைநிறுத்த சமூக நல்லிணக்கம் முக்கியமானதாகும். மேலும், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான காலக்கட்டங்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளின் போது அவசர உதவிக்காக அரசின் கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவித்தார். குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மற்றும் 18 வயது முழுவதும் பூர்த்தியடையாத பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் போக்சோ சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். Protection of Children from Sexual Offences Act (POCSO ACT) 2012 (குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு 24 மணிநேரம் அழைக்கவும்-1098)
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் பிரச்சனைகள், பள்ளிக்கல்வி துறை சார்ந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள், மனநல ஆலோசனைகள் மற்றும் உயர்கல்வி குறித்து ஆலோசனை வழங்க பள்ளி தகவல் உதவி மையம் செயல்படுகிறது.
( பள்ளி மாணவர்களுக்கான உதவி எண்.14417), பெண்கள் எங்கேயும், எப்போதும் பிரச்சனைகளின் போதும், நெருக்கடியான நேரங்களிலும் அவசர உதவிக்கு 181 மற்றும் 1091 ஐ அழைக்கவும். மேலும் பெண்கள் அவசர காலங்களில் தங்களது மொபைல் போனில் காவல் உதவிக்காக KAVALAN ‘SOS’ மற்றும் காவல் உதவி மொபைல் செயலியை கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து கொள்வது அவசியம். ( பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உதவி எண்.181 மற்றும் 1091 ], முதியவர்கள் வங்கியில் பணம் செலுத்த செல்லும் போதோ அல்லது ஏ.டி.எம்மில் பணம் எடுக்க செல்லும் போதோ பாதுகாப்பிற்கு கூடுதலாக தெரிந்த நபரை உடன் அழைத்து செல்ல வேண்டும். அதேபோல் வீட்டில் தனியாக இருக்கும் போது பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்கள் மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டினுள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். [முதியோர்களுக்கான உதவி எண். 14567]
வங்கிக்கு அருகிலும், வேறு சில இடங்களிலும் சில குற்றவாளிகள் ரூபாய் நோட்டுகளை கீழே போட்டுவிட்டு அதன் மூலம் தங்களது கவனத்தை திசை திருப்பி (Attention diversion) தங்களிடமுள்ள பணத்தையோ, நகைகளையோ பறித்து செல்ல வாய்ப்பு உள்ளது. [அவசரகால காவல் உதவி எண்.100], வங்கியிலிருந்து பேசுவதுபோல் யாரேனும் தங்களிடம் பேசி தங்களது அக்கவுண்ட் நெம்பர் மற்றும் ஏ.டி.எம் பேங்க் கார்டின் ரகசிய எண்களை கேட்டால் அவர்களிடம் வங்கி சம்மந்தப்பட்ட எந்த விபரங்களையும் சொல்லக்கூடாது. [ இணையவழி குற்றங்களுக்கான புகார் எண்.1930), உடல் ஆரோக்கியம்தான் முதல் சொத்து. போதை நாம் காசு கொடுத்து வாங்கும் வேதனை. இறுதியில் மரணம். நம் சமூகத்தில் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் உள்ளிட்ட இதுபோன்ற போதைப் பொருட்களை அறவே ஒழிப்பதற்கு சபதம் ஏற்போம். பெற்றோர்களே… உங்கள் பிள்ளைகளை போதை என்னும் அரக்கனிடமிருந்து காப்பாற்றுங்கள். போதைப்பொருட்களை ஒழிப்போம் சமுதாயத்தை பாதுகாப்போம்!! போதைப்பொருள்களை கடத்துவதோ, வைத்திருப்பதோ, விற்பதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
[ கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் பற்றிய 24 மணிநேரம் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்.10581 ] மனச்சோர்வடைந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்காக, தற்கொலை தடுப்பு உதவி மையம் மற்றும் மருத்துவ ஆலோசனை மையம் செயல்படுகிறது. ( மருத்துவ ஆலோசனை மற்றும் தற்கொலை தடுப்பு உதவி மைய எண்.104), ஊர்ந்து செல்லும் நத்தைக்கு உடல் கவசம் உண்டு. உயிர் காக்க துணையிருக்கு! உயிர் கவசம் நமக்கிருக்கு!! தலைக்கவசம் நம் தலையை காப்பதற்கு மட்டுமல்ல… நமது தலைமுறையை காப்பதற்கும்தான். உண்மையை உணர்வோம். கடமையை செய்வோம். சாலை விதிகளை மதிப்போம். சாலைகளில் நடக்கும் போக்குவரத்து குற்றங்கள் மற்றும் சாலை விபத்துகள் குறித்து (24X7) புகார் தெரிவிக்க மற்றும் உதவிக்கு தொடர்புக்கொள்ள : 94981 81457, “ஒவ்வொரு காவலரும் சீருடை அணிந்த பொதுமக்கள்” ; “ஒவ்வொரு பொதுமக்களும் சீருடை அணியாத காவலர்கள்” காவல்துறையும், பொதுமக்களும் இணைந்து சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குவோம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் , நமது சமூகத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்போம்! மேலும், நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் பொதுமக்களிடத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.இரா.சிவக்குமார், இ.கா.ப அவர்களின் கனவு திட்டமான “நல்லுணர்வு நாடி” என்ற திட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது பொதுமக்கள் வெகுவாக ரசித்து வரவேற்று பாராட்டு தெரிவித்தார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்