தூத்துக்குடி : தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பாராமரிக்கவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர் செயலி“ காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து இன்று (03.01.2023) முதற்கட்டமாக தூத்துக்குடி நகரம் மற்றும் ஊரக உட்கோட்ட காவல்துறையினருக்கு ‘ஸ்மார்ட் காவலர் செயலி”யை செல்போனில் பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த அறிமுக கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த செயலி காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும் அவற்றை பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும் சிறப்பாகவும் கையாளவும் காவல்துறையினருக்கு ஏதுவாக இருக்கும்.
மேலும் இந்த செயலி காவல்துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி தேவை ஏற்பட்டாலோ இதுகுறித்த செய்தியினை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், மேலும் தங்களுடைய காவல் நிலையத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சட்டவிரோத செயல்கள் நடவாமலும், புகார் அளிக்க வரும் பொதுமக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு ‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி, அதன் மூலம் குற்றமில்லாத தூத்துக்குடி மாவட்டமாக உருவாக்கி சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வரவேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் காவல்துறையினருக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், சி.சி.டி.என்.எஸ் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. விக்டோரியா அற்புதராணி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.