சேலம்: சேலம் அம்மாபேட்டை பகுதியில் காவல் உதவி ஆணையாளர் திரு.ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புறவழி சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியிலிருந்து மூட்டைகள் அருகில் இருந்த சரக்கு ஆட்டோவில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
காவல்துறையினரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடியது. இதையடுத்து லாரியை சோதனை செய்ததில் மாட்டு தீவன மூட்டைகளுக்கு இடையே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் அதிலிருந்த போதைப்பொருள் மூட்டைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளை சோதனை செய்ததில் அதில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.மோகன்ராஜ் உத்தரவின் பேரில் இரண்டு லாரிகள் மற்றும் புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சேலம் மாநகரம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் வரும் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதத்திற்குள் போதைப்பொருட்கள் புழக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். பேட்டி – நஜ்முல் ஹோடா – சேலம் மாநகர காவல் ஆணையாளர்