தூத்துக்குடி : கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் கண்ணன் மனைவி லாவண்யா (31), என்பவரது வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மர்ம நபர்கள் 3 கோழிகளை திருடிச் சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பந்தமான காட்சிகள் லாவண்யா வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை வைத்து எதிர் வீட்டில் உள்ளவர் கோழி திருடியவர்களை கண்டுபிடித்து கோழி திருடியது சம்மந்தமாக கேட்டு சமரசமாக பேசி முடித்துக்கொண்டனர். இந்நிலையில் கோழி திருடிய மேற்படி கும்பல் கடந்த (24.10.2022), அன்று அதிகாலை லாவண்யா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து லாவண்யா மற்றும் அவரது தாயாரிடம் எப்படி சிசிடிவி பதிவுகளை கொடுக்கலாம் என்று அவதூறாக பேசி, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து லாவண்யா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அரிக்கண்ணன், பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ், தலைமைக் காவலர் திரு. ஆனந்த அமல்ராஜ், முதல் நிலைக் காவலர் திரு. பாண்டியராஜ் மற்றும் காவலர் திரு. சிவா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியைச் சேர்ந்தவர்களான அழகுலட்சுமணன் மகன் 1) மகேந்திரன் (19), சங்கிலி பாண்டி மகன்கள் 2) பொன்பாண்டி (21), மற்றும் 3) சங்கிலி பாண்டி (25), செண்பகராஜ் மகன் 4) மருதுபாண்டி (26), கோவில்பட்டி இடைச்செவல் பகுதியைச் சேர்ந்த கொண்டையப்பன் மகன் 5) நாகராஜ் (எ) விஷ்ணு (23), மற்றும் அத்தை கொண்டான் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் 6. பூபேஷ் (20), ஆகியோர் மேற்படி லாவண்யா வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டு வாசலில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேற்படி 6 குற்றவாளிகளை கைது செய்வதற்கு சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்கி தைரியமாக செயல்பட்ட திருமதி. லாவண்யா அவர்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டாக்டர் திரு. சி. சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.