சேலம்: மேச்சேரி அரசு பள்ளியில் 2-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதில் கால் முறிந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேச்சேரி அரசு பள்ளியில் 2-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதில் கால் முறிந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மேச்சேரி அருகே உள்ள அமரன் நாச்சன்வளவை சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவியை நேற்று வழக்கம் போல் உறவினர் ஒருவர் பள்ளிக்கு அழைத்து வந்தார்.
இதையடுத்து வகுப்பறைக்கு சென்ற அவர் அங்கு அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை சக மாணவிகள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவிகள் அனைவரும் பள்ளியில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்திற்கு சென்று விட்டனர். அதே நேரத்தில் அழுது கொண்டிருந்த அந்த மாணவி மட்டும் அங்கு செல்லாமல் பள்ளியின் 2-வது மாடிக்கு சென்ற அவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்தார்.
இதைப் பார்த்து ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கால்முறிந்து படுகாயம் அடைந்த அந்த மாணவியை ஆசிரியைகள் மீட்டு சிகிச்சைக்காக மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதிகாரிகள் விசாரணை
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பள்ளியின் 2-வது மாடியில் இருந்து பிளஸ்-2 மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற தகவல் அறிந்ததும் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மேட்டூர் தாசில்தார் முத்துராஜா, மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற மாணவி உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இந்தநிலையில் மாணவி பள்ளியின் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, துணை போலீஸ் கமிஷனர் லாவண்யா ஆகியோர் நேரில் சந்தித்து விசாரித்தனர்.
மேலும் அந்த மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டீன் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் டாக்டர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
இதையடுத்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நன்றாக உள்ளார். மாணவிக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான நடவடிக்கையை டாக்டர்கள் மேற்கொள்வார்கள். மாணவியின் இந்த முடிவுக்கு பள்ளி நிர்வாகமோ, ஆசிரியைகள் அல்லது பாடம் சார்ந்த எந்த பிரச்சினையோ இல்லை.
குடும்ப பிரச்சினையால் மன குழப்பம் ஏற்பட்டு அவர் இந்த முடிவு எடுத்துள்ளார். அவருக்கு கவுன்சிலிங் கொடுத்துளோம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகள் தங்களுடைய பிரச்சினைகளை ஆசிரியர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நேற்று மாலை சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தினேஷ் குமரன், சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடம் வாக்குமூலம் பெற்றார்.