திண்டுக்கல்லை அடுத்த வேல்வார்கோட்டையை சேர்ந்த தாலிப்ராஜா(26) இவர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 2-ம் தேதி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருச்சி மத்திய சிறையில் இருந்து அழைத்து கொண்டு திருச்சி பஸ் நிலையத்துக்கு போலீசார் வந்தனர்.
அப்போது கழிப்பறை சென்று வருவதாக கூறி போலீசாரிடம் தாலிப் ராஜா தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவரை பிடிப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா அறிவுறுத்தலின் பேரில் டிஎஸ்பி.மணிமாறன் தலைமையில் நகர் குற்றத்தடுப்பு போலீசாரான சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நல்லதம்பி, வீரபாண்டியன் காவலர்கள் ஜார்ஜ், ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சைபர் கிரைம் உதவியுடன் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாலிப் ராஜாவை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் அவரை விசாரணை செய்ததில் திண்டுக்கல் கோபால் நகரில் இரு சக்கர வாகனம் திருடியது மேலும் நத்தத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருடன் சேர்ந்து திருப்பூரில் இருவேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது ஆகியவற்றை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடமிருந்து காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய பிரபல ரவுடியை பிடித்த போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி ரவளி பிரியா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.