சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்திருப்பதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திரு.சாஷாங் சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி தனிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது மெரினா கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் காரில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி தங்கையா(58), தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த சசிகுமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், சென்னையில் பிரபல கஞ்சா வியாபாரியாக உள்ள ரத்தினம் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்தது.
போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், பதுக்கி வைத்திருந்த 85 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து பிரபல கஞ்சா வியாபாரி ரத்தினம் மகன் ரஞ்சித் என்பவரை கைது செய்தனர்.