தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிக்கேல் நகர் பகுதியை சேர்ந்தவரான பெருமாள் மகள் லெட்சுமி (எ) ராமலெட்சுமி என்பவர் மனம் வளர்ச்சி குன்றியவர். இவரை கடந்த 15.12.2013 அன்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்ச்சித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான வேம்பாரைச் சேர்ந்தவர்களான அந்தோணி ராபர்ட் கென்னடி மகன்
ராஜா (எ) அதிசய பரலோக ராஜா 33, அந்தோணிச்சாமி மகன் அந்தோணி ராஜ் 32. மற்றும் அற்புதசாமி மகன் ஆரோக்கியம் 33. ஆகிய 3 பேரை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் 17.06.2016ல் கோப்புக்கு எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் குற்றவாளியான அந்தோணிராஜ் என்பவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த காரணத்தால் மகிளா நீதிமன்றம் கடந்த 06.01.2021 அன்று அந்தோணிராஜ்க்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாத பாண்டியன், முதல் நிலை காவலர்கள் திரு. ராஜபாண்டி, திரு. சங்கிலி முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை ராமநாதபுரம், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேடி வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிஅந்தோணிராஜை நேற்று (15.09.2021) இரவு கைது செய்தனர்.
நீதிமன்ற பிடியாணை குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த மேற்படி தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.