சென்னை: சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக,
F3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு 13.06.2021 அன்று கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நுங்கம்பாக்கம், டேங்க் பண்ட் ரோடு அருகில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் Herbal Psychotherapy என்ற பெயரில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டருக்கு சென்று கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு, மேற்படி மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ரஜீஸ், (வ/33) அடையார் என்பவரை கைது செய்தனர். மேலும் மேற்படி மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 1 பெண் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் மேற்படி குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.