விழுப்புரம் : விழுப்புரம் டெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் இந்த அமைப்பு செயல்பட்டு வந்த இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்தன. இதற்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில், ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ஸ்ரீநாதா, மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தங்கும் விடுதிகளில் யாரேனும் சந்தேகப்படும்படியாக தங்கியுள்ளனரா? என போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அதுமட்டுமின்றி குற்றம் அதிகம் நடைபெறும் இடங்களாக கருதப்படும் இடங்களில் பழைய குற்றவாளிகளின் நடமாட்டம், ரவுடிகளின் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ், ரெயில் நிலையங்கள் கண்காணிப்பு மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், தேச தலைவர்களின் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது