தூத்துக்குடி : தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்திமாநகர் பரி. பாத்திமா அன்னை ஆலயத்தில் உள்ள இறையடியார் சூசைநாதர் நூலக வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பாத்திமா நகரை சேர்ந்த 40 மாணவ, மாணவியர்களுக்கும், பாத்திமாநகர் பகுதியில் உள்ள நூலகத்திற்கும் அரசு தேர்வுகள் சம்பந்தமான பொது அறிவு புத்தகங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் நம்மால் எதுவும் முடியும் என்று நினைத்து படித்தால் வெற்றி நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். படிக்க வேண்டும் என்று நினைத்தால் மாணவர்களாகிய உங்களுக்கு சூழ்நிலை ஒரு தடையாக இருக்காது. மேலும் வாழ்க்கையில் எப்போதும் ஒரு குறிக்கோளுடன் இருக்க வேண்டும் என்று கூறி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் தலைமையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் மற்றும் போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பரி. பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்திரு. ஜேசுதாஸ், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் திருமதி. ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜ் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.