சென்னை : சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ளது. இதில் நாளொன்றுக்கு சுமார் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் டிக்கெட் மற்றும் உடமைகள் சோதனை உட்பட அனைத்து வகையான சோதனைகளையும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தான் செய்கின்றனர். மேலும் சென்னை விமான நிலையம் முழுவதும் வெடிகுண்டு உள்ளிட்டவற்றை வெடி பொருட்கள், ரசாயனங்கள், போதைப் பொருள்கள் போன்றவற்றை கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பு பணியில், ஈடுபட்டு வந்த ராணி என்கிற மோப்பநாய் வயது மூப்பின் காரணமாக நேற்று ஓய்வு பெற்றது. ராணியின் பணியை கௌரவிக்கும் விதமாக அதற்கு ஓய்வு பெறும் நிகழ்ச்சியை மத்திய தொழிற்படை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ராணி மோப்ப நாய்க்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டு மாலையணிவித்து மெடல் வழங்கி சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் ராணி மோப்ப நாயை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஜிப்பில் ஏற்றி கயிறு கட்டி இழுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.