தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் இன்று திருச்செந்தூர் உதயம் மஹாலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை (30.10.2022) சூரசம்ஹார விழா மற்றும் நாளை மறுநாள் (31.10.2022) திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நாளை நடைபெறவுள்ள சூரசம்ஹார விழாவை முன்னிட்டு இன்று (29.10.2022) திருச்செந்தூர் உதயம் மஹாலில் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யார், யாருக்கு எந்தெந்த இடங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர்கள் செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்தும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த திருவிழாவை முன்னிட்டு 7 காவல் கண்காணிப்பாளர்கள், 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 32 காவல் உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், 71 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் கந்த சஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் இ.கா.ப அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரிகிரன் பிரசாத் இ.கா.ப அவர்கள், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு. சாய் பிரனீத் இ.கா.ப அவர்கள், மணிமுத்தாறு 9வது பட்டாலியன் தளவாய் திரு. ஏசு சந்திர போஸ் அவர்கள், மணிமுத்தாறு 12வது பட்டாலியன் தளவாய் திரு. கார்த்திகேயன் அவர்கள், ராஜபாளையம் 11வது பட்டாலியன் தளவாய் திரு ராஜசேகரன் அவர்கள், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் அவர்கள் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.