திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானல், தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியில், பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து வனத்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம், பாரதி அண்ணாநகர், கோம்பை உள்ளிட்ட இடங்களில் பகல் நேரத்திலேயே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள், விவசாயிகளை அச்சுறுத்துவதோடு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் திரு.திலீப், வனச்சரகர் திரு. சிவக்குமார், வனவர்கள் திரு. அழகுராஜா, திரு. கார்த்திக் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சமூக ஆர்வலர் பேத்துப்பாறை திரு. மகேந்திரன் என்பவர், யானைகளின் வழித்தடங்களில் சோலார் மின் வேலிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அஞ்சுவீடு அருவியை சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும் என்றும் மாவட்ட வனஅலுவலர் தெரிவித்தார்.
