விழுப்புரம் : வானூரை அடுத்த பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியை நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தந்திராயன்குப்பம் கடற்கரை, கோட்டக்குப்பம் இ.சி.ஆர். ரவுண்டானா ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். புயல் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து தொடங்கப்பட்டதை பார்வையிட்டார்.
அதன் பின்னர் கலெக்டர் மோகன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, புயல் பாதிப்பு கணக்கெடுப்பு விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்தபோது வீசிய பலத்த காற்றினால் 13 மரங்கள் முறிந்து விழுந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து தடையில்லாமல இயங்கின. மேலும் மாவட்டம் முழுவதும் புயலினால் வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டாரவி தேஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.