சென்னை: சென்னை மாதவரம் காவல் துணை ஆணையாளர் தலைமையில், கானா பாலா மற்றும் கானா பாடகர்களுடன் கானா பாடல்களில் கஞ்சா, குட்கா, மாவா, உள்ளிட்ட போதை பொருட்களின் பெயர்களை சேர்க்காமல் பாடல் பாடுவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கஞ்சா, குட்கா, மாவா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மாதவரம் துணை ஆணையாளர் திரு.சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாதவரம் சரக உதவி ஆணையாளர் திரு.அருள் சந்தோஷமுத்து மற்றும் காவல் ஆளிநர்களுடன் காவல்துறை சார்பில், 27.12.2021 அன்று கானா பாடகர்களுடன் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இடம் பெற்றுள்ள சில கானா பாடல்களில் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்து இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயம் இப்பாடல்களை கேட்டு தவறான பாதைக்கு செல்ல வழி வகுக்கும் என்பதால், கானா பாடகர்கள் இனி வரும் காலங்களில் போதை பொருட்களை கொண்டு பாடல் பாடாமல் நல்ல கருத்துக்களை இடம் பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கானா புகழ் பாடகர் திரு.கானா பாலா அவர்களும் இளைஞர் சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் பாடல்களை பாடும்படியும், போதை பொருட்களின் பெயர்களை பயன்படுத்தாமல் பாடல்களை பாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதன்பரில், கானா பாடகர்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குறித்து பாடி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 3 பாடல்களை உடனே நீக்கம் செய்தனர். மேலும், இனி வரும் காலங்களில் போதை குறித்த பாடல்களை பாடுவதில்லை என கானா பாடகர்கள் உறுதி கூறினர்.