திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியானது மிக பாரம்பரியமிக்க பூர்வீக பகுதியாகும். இங்குள்ள இயற்கை சூழல் எவரையும் எளிதில் கவரும் வண்ணம் இயற்கையாய் அமர்ந்துள்ளது. மாறிவரும் பருவ காலம், பெருகிவரும் திடீர் பெருமழை, குறைந்து வரும் மண்வளம், பறவை மற்றும் மீன் இனங்கள் ஆகியவை சுற்றுச்சூழல் மாறுபாட்டின் வெளிப்பாடுகளாக இருப்பினும் இந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில் உள்ளூரில் என்ன செய்ய முடியும் என்கிற வகையில் நீர்நிலை வளங்களை மேம்படுத்துவது, தக்க வைத்துக் கொள்வது, நாளைய சந்ததிக்கு நம்மால் இந்த பூவுலகை வாழ தகுந்த வகையில் கொடுக்க வேண்டிய கடமை என்ற வகையில் பழவேற்காடு பகுதியில் உள்ள எடமணி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பழவேற்காடு ஏரி சூழல் மேம்பாட்டு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு ஏரி சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஏரி சூழல் மேம்படவும், பறவைகள் சரணாலயமான பழவேற்காடு பகுதிக்கு வரும் வலசை பறவைகளின் எண்ணிக்கை உயரவும் குறுங்காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி நமது மண்ணின் பூர்வீக மரங்களான ஆலமரம், வேப்பமரம், அரசமரம், புங்கமரம், புன்னை மரம், பொற்கொன்றை மரம் போன்ற சுமார் 8லிருந்து 10 அடி உயரமுள்ள மரக்கன்றுகள் 1000 நடப்பட உள்ளன.
அதன் முதல் கட்டமாக 500 மரங்கள் என்று எடமணி கிராம மக்களின் முன்னெடுப்போடு கிராம நிர்வாகிகள் முன்னிலையில் எர்த் வாட்ச் இன்ஸ்டிட்யூட், மிட்சுபிஷி மற்றும் பிளான்ட் தொண்டு நிறுவனங்களின் சார்பாக பிளான்ட் தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் முனைவர்.இரா.ஜான் சுரேஷ் தலைமையில் முதற்கட்டமாக 500 மரங்கள் நடப்பட்டன. இதில் திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கர் பொதுச் செயலாளர் மகேந்திரன், எடமணி மற்றும் சாட்டான் குப்பம் கிராம பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு