தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு ‘மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியையும், அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்பதற்காக பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவ, மாணவிகளையும், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதற்காக ‘பள்ளிக்கு திரும்புவோம்” என்ற திட்டத்தையும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் துவக்கி வைத்து, அவரது உத்தரவின்பேரில் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு நல்ல பலன் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 3 மாதத்திற்கு பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியிருந்தது தெரியவந்தது.
இதையறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி திரு. மாயவன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எஸ்.ஐ திரு. செல்வன் தலைமையிலான போலீசார் அந்த மாணவி பள்ளிப்படிப்பை கைவிட்டதற்கான காரணத்தையும், அதை தொடர்வதற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதையும் கண்டறிந்து, அதற்கான வசதிகள் செய்து கொடுத்து, அந்த மாணவியை (21.03.2023) டி.எஸ்.பி அவர்கள் தனது வாகனத்திலேயே நாசரேத் செயின்ட் ஜான்ஸ் பெண்கள் மேல்நிலைபள்ளிக்கு அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து பேசி 9வது வகுப்பில் சேர்த்து பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு ஏற்பாடு செய்தார். அந்த மாணவியும் இனிமேல் நல்லமுறையில் உயர் கல்வி வரை படிப்பேன் என உறுதியளித்துள்ளார். பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மேற்படி மாணவியை கண்டறிந்து, தேவையான உதவிகளை செய்து மீண்டும் பள்ளியில் சேர்த்து பள்ளிப்படிப்பை தொடர வைத்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி திரு. மாயவன் தலைமையிலான ஆழ்வார்திருநகரி எஸ்.ஐ. செல்வன் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.