இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிரி அம்பலம் நாராயணன் தெருவைச் சேர்ந்த தினகரன் மனைவி கமலம் என்பவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தனது கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறிக்க முயன்றதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
மேலும், மேற்கண்ட வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் மணி என்ற மணிகண்டன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனங்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்ததோடு இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேற்படி, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து திறமையாக துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வேல்முருகன் அவர்கள் தலைமையிலான உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.,IPS, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.