திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல் முறையாக தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியால் தற்காலிக காவல் பயிற்சிப் பள்ளி அனுமதிக்கப்பட்டு கடந்த (14.03.2022), முதல் 7 மாதகாலமாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 95 பயிற்சி காவலர்களுக்கு இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் 18 பொறியாளர்களும், 40 பட்டதாரிகளும், 11 பல்தொழில் நுட்ப பட்டதாரிகளும், 12 முன்னாள் இராணுவத்தினரும், 09 விளையாட்டு வீரர்களும் அடங்குவர். (19.10.2022), மாலை காவல் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை திரு. K. ஜோஷி நிர்மல் குமார், இ.கா.ப. அவர்கள் தலைமை ஏற்றார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. B. முருகேஷ், இ.ஆ.ப. அவர்களும், தமிழ்நாடு மாநில தடகள சங்க துணை தலைவரும் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க தலைவருமான டாக்டர் எ.வ.வே.கம்பன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பயிற்சி பள்ளியின் முதல்வருமான டாக்டர். கி. கார்த்திகேயன், இ.கா.ப அவர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார்.
மேற்படி பயிற்சியில் வேலூர் மாவட்டத்திலிருந்து காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 95 பயிற்சி காவலர்களுக்கு 1. உடற்திறன் மேம்பட – உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மலையேறும் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, கலவரக் கட்டுப்படுத்தல் பயிற்சி மற்றும் கூட்டத்தை கையாளும் பயிற்சிகளும், 2. மன வலிமை மேம்பட – யோகாசனம், சகிப்புத்தன்மை வளர்க்கும் பயிற்சி, உளவியல் சார்ந்த பயிற்சிகளும், 3. சட்ட நுணுக்கங்கள் அறிய – சட்ட வகுப்புகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பயிற்சிகளும், 4. தனித்திறம் மேம்பட – மகிழுந்து ஓட்டுநர் பயிற்சி, நீச்சல் பயிற்சி, கணிப்பொறி பயிற்சி, குண்டுகள் கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்தல், சிறைச்சாலை நடைமுறைகள், தணிக்கைச் சாவடி பணிகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் சீரிய முறையில் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்களுக்கான 35 அடிப்படைக்காவலர் பயிற்சிப் பள்ளிகளிலே திருவண்ணாமலை தற்காலிக காவல் பயிற்சி பள்ளியானது இரண்டாவது இடத்தை பெற்று அதற்கான பதக்கத்தினை தலைமை ஏற்ற சிறப்பு விருந்தினரிடமிருந்து பெறப்பட்டது. மேலும் இந்நிறைவு விழாவில் பயிற்சி காவலர்களால் வெவ்வேறு வகையான கவாத்து பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்ட பின் பயிற்சி பள்ளியின் துணை முதல்வரும், திருவண்ணாமலை மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான திரு. ஸ்டீபன், அவர்களால் நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றது.