திருவள்ளூர் : திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக திருவள்ளூர் குடிமை பொருள் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் பொன்னேரி அருகே உள்ள கொக்குமேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் சோதனை செய்தனர். அப்போது 102 மூட்டைகளில் 5,100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் எந்தவிதமான அனுமதியும் இன்றி மினி லாரி ஒன்றில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி ஏற்றி வந்து கொக்குமேடு தனியார் அரிசி ஆலையில் இறக்கி கள்ள சந்தையில் விற்பதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் லாரி ஓட்டுநர் தடப்பெரும்பாக்கம் ராஜா தெருவை சேர்ந்த மணிகண்டன் (29), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜி (21), அரிசி ஆலையில் பணிபுரியும் கொக்குமேடு கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை தமிழ்நாடு குடிமைப் பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர்.