விழுப்புரம் : விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், மற்றும் போலீசார் நேற்று மாலை விழுப்புரம் அருகே வேலியம்பாக்கம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையின் பின்புற பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 21 சாக்கு மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (54) என்பவர் அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.