திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியை சேர்ந்த கணேசகண்ணன் (35), என்பவரின் வங்கி கணக்கில் இருந்து, அடையாளம் தெரியாத நபர் பணம் திருடுவதை அறிந்து (18.07.2022),-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேற்படி சம்பவம் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.., அவர்கள் மேற்படி நபரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடிய நபரை விரைந்து கைது செய்யும்படி சைபர் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ராஜூ, அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கணேசகண்ணன் என்பவரும் அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த சரவணன்(32), என்பவரும் நண்பராக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் சரவணன், கணேசகண்ணன் என்பவரின் ஏர்டெல் நம்பரில் அவரது வங்கி கணக்கு விபரங்கள் இருப்பதை அறிந்துள்ளார். சரவணன் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதால் தொழிலில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணன், கணேச கண்ணனிடம் ரூ.10 இலட்சம் வங்கியில் கடன் பெற்று தரும்படி கேட்டுள்ளார். கணேசகண்ணன் கடன் பெற்று தர மறுத்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது எண்ணுக்கு Recharge செய்யும்படி கணேச கண்ணனிடம் கேட்டுள்ளார், கணேசகண்ணன், சரவணனிடம் செல்லை கொடுத்து Recharge செய்யும்படி கூறியுள்ளார்.
அச்சமயம் சரவணன் அவரது வங்கி சேமிப்பு விபரங்கள்,வங்கி எண் ஆகியவற்றை அறிந்து கொண்டார். பின் கணேசகண்ணனின் செல் நம்பரை செயலிலக்க செய்து அதே எண்ணை சரவணன் அவர் பெயரில் மாற்றம் செய்து பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து ரூ.2 இலட்சத்து 21 ஆயிரத்தை GPay மூலம் சரவணன் கடன் பெற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சைபர் கிரைம் காவல்துறையினர் சரவணனை கைது செய்து அவரிடமிருந்து ரூ.1 இலட்சத்து 32 ஆயிரம் பணத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள் உரிமையாளரிடம் வழங்கினார்.