தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாரியப்பன் 65. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் இராஜேஸ்வரன் 28. மற்றும் சிலர் சேர்ந்து தூத்துக்குடி ராஜீவ்நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துகிருஷ்ணன் 34. என்பவர் மற்றும் அவரது சகோதரரிடம் இரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 01.02.2022 முதல் 31.12.2022 வரை பல தவணைகளில் மேற்படி குற்றவாளிகளின் வங்கி கணக்குகளிலும், ரொக்கப் பணமாகவும் மொத்தம் ரூபாய் 30 லட்சம் பணத்தை பெற்று கொண்டு முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரரை மேற்கு வங்காளம் ஹவுராவிற்கு அழைத்துச் சென்று, மெடிக்கல் செக்அப் மற்றும் போலி சான்றிதழ் வாங்கி கொடுத்தும் இரயில்வே பணிக்கு பயிற்சி என கூறி கொல்கத்தா, டெல்லி என அலைக்கழித்தும் வேலை வாங்கி கொடுக்காமலும் மேற்படி குற்றவாளிகள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயராம் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமதி. அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. சண்முகசுந்தரம் மற்றும் திரு. ராஜ்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி குற்றவாளிகள் மாரியப்பன் மற்றும் இராஜேஸ்வரன் ஆகிய 2 நபர்களையும் கைது செய்தனர்.
மேற்படி குற்றவாளிகளிடம் விசாரணை செய்ததில் இதுபோன்று பல நபர்களிடம் இரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மொத்தம் ரூபாய் 1 கோடியே 28 லட்சம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.