சென்னை: மெரினாகடற்கரையில் இரவில் படுத்திருந்த நபர்களை கட்டையால் தாக்கி பணம் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்ற 4 குற்றவாளிகளை 2 மணி நேரத்தில் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
02.03.2020 அன்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே பெங்களூரைச் சேர்ந்த முகமது பஷீர் உறங்கிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் முகமது பஷீரின் தலையில் கட்டையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் இது போல சற்று தொலைவில் படுத்திருந்த அன்பரசன், வ/48, த/பெ.சுப்பிரமணியன், தஞ்சாவூர் மாவட்டம் என்பவரையும் சுமார் 4 நபர்கள், கட்டையால் தாக்கி பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து முகமது பஷீர் மற்றும் அன்பரசன் ஆகியோர் D-5 மெரினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேற்படி சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததன்பேரில், D-5 மெரினா காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து காவல் ஆளிநர்கள் அதிகாலை சுமார் 01.30 மணியளவில் (03.03.2020) காமராஜர் சாலை, காந்தி சிலை அருகில் வாகனத் தணிக்கையின்போது TN05 Aw 1371 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவில் வந்த 4 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, 1.இளவரசன், வ/28, த/பெ.மல்லீஸ்வரன், கொருக்குப்பேட்டை, 2.டேவிட், வ/19, த/பெ.திருமலை, பழைய வண்ணாரப்பேட்டை 3.காதர், வ/22, (ஆட்டோ ஓட்டுநர்), த/பெ.சர்புதீன், வண்ணாரப்பேட்டை, 4.சூர்யா, வ/24, த/பெ.சேகர், மின்ட் பாலம் அருகிலுள்ள குடிசைப்பகுதி என்பதும், 4 பேரும் சேர்ந்து மேற்படி முகமது பஷீர் மற்றும் அன்பரசனை கட்டையால் தாக்கி பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. மேற்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சொத்துக்கள் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.
இரவு பணியின்போது, விழிப்புடன் செயல்பட்டு குற்றச் சம்பவம் நடந்த சுமார் 2 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த D-5 மெரினா காவல் நிலைய தலைமைக்காவலர் S.செல்வகுமார் (த.கா.26887), ஆயுதப்படை காவலர்கள் S.சௌந்தராஜ் (கா.48058), A.சோலைராஜன்(கா.49050) மற்றும் K.நிஷாந்த் குமார் (கா.52352) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (03.03.2020) அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை