மதுரை : மதுரை தேனி மெயின் ரோடு மீனாட்சி நகரில் உள்ள ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் கிளையில் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தவர் கார்த்திக் விஜயன். இவர் கடந்த 10/06/2022 ஆம் தேதி தங்கள் நிறுவனம் மூலம் வசூல் செய்து வங்கியில் செலுத்த வேண்டிய 55, 39,000/- ரூபாயை வங்கியில் கட்ட வேண்டிய பணத்தை கட்டாமல் ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவானார்.
கார்த்திக் விஜயன் அவர்கள் மீது நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.செந்தில்குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திருமதி.வனிதா அவர்களின் நேரடி பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மதுரை மாநகர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.ஆனந்த் மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர்ஷிலா தலைமையில் சார்பு ஆய்வாளர் திருமதி.இந்துமதி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி.மெலன் திருமதி. பராசக்தி தலைமை காவலர் திரு. சுப்பிரமணியன் முதல் நிலை காவலர் திரு. முத்துப்பாண்டி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த குற்றச்செயலில் தொடர்புடைய குற்றவாளி கார்த்திக் விஜயனை தேடி வந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோழிக்கரை பள்ளத்தாக்கு, ஆதிவாசிகள் குடியிருப்பில், கார்த்திக் விஜயன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 1, 41, 600/- ரூபாயும், அவர் அளித்த தகவலின் படி, அவரது மைத்துனர் ராஜேஷ்குமார் என்பவரிடமிருந்து 44,04,000/- ரூபாயும் அவரது மனைவி அழகு ராணியிடம் இருந்து 20,700/- ரூபாயும் மற்றும் அழகு ராணி தாங்கள் ஒத்தி வீட்டை திருப்புவதற்காக அருண்பாண்டியன் என்பவரிடம் கொடுத்த 5,50,000/- ரூபாயும், ஆக மொத்தம் 51,16,300/- ரூபாயை மீட்டு மேற்படி குற்றவாளி கார்த்திக் விஜயன், அவர் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ராஜேஷ் குமார் மற்றும் அழகு ராணி உள்ளிட்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குற்ற சம்பவத்தில் விரைவாக துப்பு துலக்கி குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு செந்தில்குமார் ஐபிஎஸ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.E. விஜயராஜ்