கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே ஜெயனூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் நேற்று வேலம்பட்டியில் பகுதியில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்து பையில் வைத்து கொண்டு கடைக்கு சென்று காய்கறி வாங்கினார். அதே கடையில் மற்றொரு பெண்ணும் காய்கறி வாங்கியுள்ளார். அப்போது இந்திராணி தனது கையில் வைத்திருந்த பணப்பையை மற்றொரு பெண் வைத்திருந்த பையில் தவறுதலாக வைத்துவிட்டார். பணப்பையில் பணம் இல்லாததை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்து அங்கு சென்ற காவேரிப்பட்டணம் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணம் திருட்டு போகவில்லை என தெரியவந்தது. இதற்கிடையே அதே கடையில் காய்கறி வாங்கி வீட்டிற்கு சென்ற பெண் அந்த காய்கறிகளை கொட்டினார். அப்போது ஒரு பையில் பணம் இருந்ததை பார்த்தார். உடனே அந்த பணப்பையை எடுத்து கொண்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் பணத்தை இந்திராணியிடம் கொடுத்தனர். மேலும் பணத்தை ஒப்படைத்த வேலப்பட்டி பகுதியை சேர்ந்த சாலம்மாளை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்