தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா தெருவில் ஜெயபால் அவரது மனைவி விஜயலட்சுமி(57) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த 07/09/2020 அன்று ஜெயபால் மற்றும் அவரது மகன் தொழில் காரணமாக வெளியே சென்றிருந்த நிலையில் அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் அப்போது பகல் 12.30 மணி அளவில் இரண்டு நபர்கள் வீட்டினுள் நுழைந்து வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமியை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு அவர் வீட்டில் இருந்த சுமார் 800 கிராம் தங்க நகை மற்றும் பணம் ரூபாய் 50,000 த்தை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் தென்காசி நகரின் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர்.
இது சம்பந்தமாக தென்காசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கை விசாரித்து வந்த நிலையில் காவல்துறையினர் அக்கம்பக்கம் அமைந்துள்ள கடைகள், விடுதிகள், CCTV கேமராக்கள்,அனைத்து நெடுஞ்சாலை ரோந்து மற்றும் சோதனைச் சாவடிகளில் பணியை தீவிரப்படுத்தி, சமூக வலைதளத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டும், புகார்தாரரின் உறவினர்கள், அவரது மரக்கடையில் பணி செய்பவர்கள் மற்றும் நண்பர்கள் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி இன்று (10/10/2020) காவல் ஆய்வாளர் திரு. ஆடிவேல் அவர்கள் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மேலமெய்ஞானபுரம் பகுதியை சேர்ந்த திருமலை முத்து என்பவரின் மகன் மணிகண்டன்(27), வேம்பு என்பவரின் மகனான ரமேஷ்(27) மற்றும் நாராயணன் என்பவரின் மகனான அருண் சுரேஷ்(32) ஆகிய மூன்று நபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் தங்க நகையை திருடிய குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்த மூன்று நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். மேலும் குற்றவாளிகளிடம் இருந்து திருட்டு போன நகைகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கில் காவல்துறைக்கு பெரிதும் உதவியது காவலர்களின் மூன்றாம் கண் என அழைக்கப்படும் CCTV கேமராக்கள் ஆகும். சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்துவதன் மூலம் திருட்டுக்களை வராமலும் நடந்து திருத்தங்களில் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கனவும் முக்கியத்துவம் காணவும் மிகவும் உதவிகரமாக உள்ளதால் தென்காசி போன்ற நகர்ப்புறங்களில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று காவல் துறையினரின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது . சுமார் 40 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய குற்றவாளிகளை ஒரு மாத காலம் தொடர்ச்சியான தொய்வின்றி பணிபுரிந்து மீட்டுக்கொடுத்த காவல் அலுவலர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.