நாமக்கல் : நாமக்கல் மோகனூர், மோகனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட என்.புதுப்பட்டி, லத்துவாடி, மணப்பள்ளி, ராமநாயக்கன்பாளையம், எல்லைகாட்டுபுதூர உள்பட 21 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண்ணால் ஆன விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் 2, 3 நாட்கள் பக்தர்கள் வழிபட்டு காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மோகனூர் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக காவிரி கரைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நாமக்கல், ராசிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரும் விநாயகர் சிலைகள் அணியாபுரம் வழியாக மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து, நாகம்மாள் கோவில் வழியாக வளையப்பட்டி சாலை சென்று அரசு மருத்துவமனை வழியாக காவிரி ஆற்றுக்கு எடுத்து சென்று ஈஸ்வரன் கோவில் படிக்கட்டு துறை அருகே கரைக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையுடன் 4 பேர் மட்டும் ஆற்று பகுதிக்கு எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மோகனூர் காவிரி ஆற்றில் ஈஸ்வரன் கோவில் படிக்கட்டுத்துறை அருகே நாமக்கல் உதவி கலெக்டர் திருமதி.மஞ்சுளா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.சுரேஷ், மோகனூர் தாசில்தார், ஜானகி, மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.தங்கவேல், வருவாய் துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர்.